கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் உலகம் முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூட முயற்சிப்பதாலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களாலும் உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. இதன் நேரடி பாதிப்பால் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி பாகிஸ்தானுடன் நிற்காமல் வங்கதேசம், இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளையும் பாதித்துள்ளது. வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளிலும் எரிபொருள் விலை விண்ணைத் தொடுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.