ஒலிம்பிக் பதக்கம் வென்ற தருணத்தில் நேரலையில் கதறிய வீரர்: துரோகம் செய்ததாக ஒப்புதல்!

மிலான் கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் 2026 போட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. நார்வே நாட்டின் பயாத்லான் வீரர் ஸ்டுர்லா ஹோம் லெக்ரெய்ட், 20 கி.மீ தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சில நிமிடங்களிலேயே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறை நேரலையில் ஒப்புக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வெற்றியின் மகிழ்ச்சிக்கு பதிலாக, அவரது முகத்தில் குற்ற உணர்ச்சியும் கண்களில் கண்ணீருமே ததும்பியது. நார்வே நாட்டு ஊடகமான NRK-விடம் பேசிய லெக்ரெய்ட், “ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எனது உண்மையான அன்பைக் கண்டடைந்தேன். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு நான் எனது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தவறைச் செய்தேன். எனது காதலிக்கு நான் துரோகம் இழைத்துவிட்டேன்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் தனது காதலியிடம் உண்மையைச் சொன்னதாகக் கூறிய அவர், தற்போது தமக்கு விளையாட்டை விடவும் தனது உறவைக் காப்பாற்றுவதே முக்கியம் எனத் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது, சக வீரர் ஜோஹான்-ஓலாவ் பாட்டன் தங்கம் வென்ற கொண்டாட்டத்தை, தனது இந்த தனிப்பட்ட ஒப்புதல் மறைத்துவிட்டதோ என்ற வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
“உலகிற்கு இந்த உண்மையைச் சொல்வதன் மூலம், அவர் (காதலி) எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்,” என்றார் லெக்ரெய்ட். இது லெக்ரெய்ட் வெல்லும் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம் என்றாலும், அவரது இந்த வெளிப்படையான ஒப்புதல் விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.