ஐ.நா. ஊழியர்களுக்கு எதிராக வழக்கு! ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஐ.நா. தலைவர் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், யேமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்கள் மீது வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹூத்திகளின் இந்தச் செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஐ.நா. ஊழியர்கள், பிற வெளிநாட்டு முகவர் மற்றும் தூதரகப் பணியாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. ஊழியர்களை ஒரு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பியதில் பொதுச்செயலாளர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்திகளின் கட்டுப்பாட்டில், ஐ.நா.வைச் சேர்ந்த 59 பேர் உட்பட ஏராளமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் யேமன் குடிமக்கள். சமீபத்தில், தடுத்து வைக்கப்பட்டவர்களில் 17 பேருக்கு, வெளிநாட்டு அரசாங்கங்களுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது, யேமனில் வெளிநாட்டு அமைப்புகளுக்காகப் பணிபுரியும் ஊழியர்கள் மீதான ஹூத்திகளின் பல ஆண்டுகால அடக்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இது சர்வதேச அளவில் தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.