எலான் மஸ்க்கின் அதிர்ச்சி தகவல்: 20 ஆண்டுகளில் பணமே இருக்காது! வேலை என்பது விருப்பத்தேர்வாக மாறும்

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, அடுத்த இரண்டு தசாப்தங்களில் பணத்திற்கான தேவை இருக்காது என்று உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கணித்துள்ளார். தொழில்நுட்பம் இதே வேகத்தில் முன்னேறினால், வசதியான வாழ்க்கையை நடத்த பணம் சம்பாதிப்பது அவசியமில்லை என்றும், வேலை என்பது ஒரு விருப்பமான தேர்வாக (Optional Choice) மாறும் என்றும் அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த அமெரிக்க-சவுதி முதலீட்டு உச்சி மாநாட்டில் பேசிய மஸ்க், 10 முதல் 20 ஆண்டுகளில் வேலை என்பது பொழுதுபோக்கு அல்லது ஒரு விளையாட்டைப் போல மாறிவிடும் என்று தெரிவித்தார். கடினமானதாக இருந்தாலும் சிலர் தங்கள் சொந்தத் தோட்டத்திலேயே காய்கறிகளை வளர்க்க விரும்புவது போல, வேலை செய்வதும் ஒரு விருப்பமான தேர்வாக இருக்கும். ஏஐ மற்றும் ரோபோக்கள்தான் அனைவரையும் பணக்காரர்களாக்குவதற்கான ஒரே வழி என்று கூறிய மஸ்க், உலகளாவிய மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.