உத்தரப்பிரதேசத்தில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகள்கள் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் மோர்னா கிராமத்தில், பாரபட்சமாக நடத்திய தந்தையை இரண்டு மகள்கள் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான ராம்பிரசாத் திங்கள்கிழமை அதிகாலை அவரது அறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முதலில் மர்ம நபர்கள் என நாடகமாடிய குடும்பத்தினர், தீவிர விசாரணைக்கு பின் மகள்களே கொலையாளிகள் என ஒப்புக்கொண்டனர்.
தந்தை எப்போதும் தங்களை இழிவாகப் பேசியதோடு, மகன்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு வழங்கவில்லை என்பதே இந்த கொலைக்குக் காரணம் என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கத்தியால் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, இரத்தக் கறை படிந்த ஆடைகளை வைக்கோல் போரில் மறைத்து வைத்தனர். தற்போது போலீஸார் அவர்களைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.