உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி: லண்டனில் ஜெலென்ஸ்கி – ஐரோப்பிய தலைவர்கள் சந்திப்பு

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஃபிரடெரிக் மெர்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து திங்களன்று லண்டனில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் முடிவில், உக்ரைனுக்குப் பிரிட்டன் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தினார். எந்தவொரு சண்டை நிறுத்தமும் நீதியாகவும் நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளை ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க தலைமையிலான முயற்சியில் ஒரு திருப்புமுனையாக உக்ரைனின் ஐரோப்பிய கூட்டாளிகள் கருதுகின்றனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே ஒற்றுமை அவசியம் என்று அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் டாம் வெல்ஸ் கூறுகையில், இது நான்கு ஆண்டுகளில் எங்கள் மிகப்பெரிய முன்னேற்றம்; பேச்சுவார்த்தைகள் அனைத்து மட்டங்களிலும் தொடர்வதை நாங்கள் வரவேற்கிறோம். போர் மற்றும் அமைதிக்கு இடையே நேரடியான வழி இல்லை என்றும், நிலுவையில் உள்ள சில பிரச்சினைகள் இருந்தாலும் வரும் நாட்களில் தீவிரமான பணிகள் தொடரும் என்றும் அவர் கூறினார். உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் ஸ்டார்மர் உறுதியளித்தார்.