ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா அல்லது கொல்லப்பட்டாரா ட்ரம்ப் எழுப்பிய அதிரடி சந்தேகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியின் நிலை குறித்து சர்வதேச அளவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அவர் உயிருடன் இல்லை என்று தாம் கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக அவர் பொதுவெளியில் தோன்றாதது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். முன்னதாக அவர் காயமடைந்துள்ளதாகக் கூறிய ட்ரம்ப், தற்போது அவர் இறந்துவிட்டிருக்கலாம் என முரணான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், மோஜ்தபா பற்றிய தகவலுக்கு அமெரிக்கா 1 கோடி டாலர் பரிசு அறிவித்துள்ளது. அவர் இஸ்ரேல் அல்லது அமெரிக்க தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பு அவர் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினாலும், ட்ரம்பின் இந்த கருத்துக்களால் உலக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரணடைவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை என அமெரிக்கா தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.