இந்தூர் ஏர்போர்ட் ‘பாஸ்டேக்’ பகல் கொள்ளை: 7 நிமிடம் இருந்தும் காலியாகும் பாக்கெட்!

இந்தூர் தேவி அகில்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்டேக் (FASTag) பார்க்கிங் முறை, தற்போது பெரும் அவஸ்தையாக மாறியுள்ளது. ‘பிக் அண்ட் டிராப்’ வசதிக்காக 8 நிமிடம் (7 நிமிடம் 59 வினாடிகள்) வரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டாலும், வெளியேறும் வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் இந்த சலுகை வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது.
வரிசையில் கழியும் நேரம்
விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டு குறித்த நேரத்திற்குள் வெளியேற முயன்றாலும், எக்ஸிட் கேட்டில் நிலவும் நீண்ட வரிசையினால் சிக்கிக்கொள்கின்றன. வரிசையில் காத்திருக்கும் போதே அந்த 7 நிமிட கால அவகாசம் முடிந்து விடுகிறது. இதனால், கேட்டை அடையும் போது பாஸ்டேக் மூலம் ரூ. 20 முதல் ரூ. 55 வரை தானாகவே பணம் கழிக்கப்படுகிறது. நிர்வாகத்தின் குளறுபடியால் தேவையின்றி பணம் இழப்பதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.
இரட்டிப்புக் கட்டணப் புகார்
இதுமட்டுமின்றி, பலருக்கு ஒரே பயணத்திற்கு இரண்டு முறை பணம் கழிக்கப்படுவதாகவும் (Double Deduction) புகார்கள் எழுந்துள்ளன. பாஸ்டேக் மற்றும் ரொக்கப் பணம் செலுத்துபவர்களுக்கு தனித்தனி பாதைகளை உருவாக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதுள்ள இந்த ‘வசதி’, பயணிகளுக்கு தேவையற்ற நிதி இழப்பையே ஏற்படுத்தி வருகிறது.