இந்தியாவில் வேகமாகக் குறையும் நிலத்தடி நீர் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் நிலத்தடி நீர் மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து வருவதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. ஆண்டிற்கு சராசரியாக 407 பில்லியன் கன மீட்டர் நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது என்றாலும் இதில் 61 சதவீதத்தை இந்தியா ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. நாட்டின் 6,762 பகுதிகளில் 730 இடங்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. மேலும் பல இடங்களில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் புளோரைடு கலந்துள்ளதால் அவை குடிக்கத் தகுதியற்றதாக மாறியுள்ளன.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசு அடல் புஜல் திட்டம் மற்றும் அமிர்த சரோவர் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாட்டின் 54 சதவீத கிணறுகளில் மட்டுமே நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு எஞ்சிய இடங்களில் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. தற்போதைய வேகத்தில் நிலத்தடி நீரைச் சுரண்டினால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.