இந்தியாவிற்குள் ஊடுருவி பயங்கரவாத பயிற்சி அளிக்க முயன்ற அமெரிக்கர் உள்ளிட்ட 7 பேர் என்ஐஏ அதிரடி கைது

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அமெரிக்க குடிமகன் மேத்யூ ஆரன் வான்டைக்கா மற்றும் 6 உக்ரேனியர்களை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இவர்கள் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து, மிசோரம் எல்லை வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைய முயன்றனர். அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கு ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதப் பயிற்சி அளிக்க இவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்கத்தா, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டவர்கள் இந்திய கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டதும், ஐரோப்பாவிலிருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. டெல்லி நீதிமன்றம் இவர்களை 11 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த சர்வதேச சதியின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.