இந்தியா உலக அரங்கில் தன்னிறைவு பெறும்! சீனாவிற்கு சவால் விட மோடி அரசின் ₹7,280 கோடி திட்டம்

முக்கிய தொழில்களில் சீனாவின் ஏகபோக உரிமையை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு புதன்கிழமை அன்று அரிதான பூமி நிரந்தர காந்தங்கள் (REPM) தயாரிப்புக்கான ₹7,280 கோடி மதிப்புள்ள திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் அதிநவீன காந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதே இதன் நோக்கமாகும். இது இந்தியாவில் இந்த வகையான முதல் முயற்சியாகும், இதன் மூலம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனை எட்டுவது இலக்கு. ‘தன்னிறைவு இந்தியா’ மற்றும் ‘நெட்-ஜீரோ 2070’ இலக்குகளுக்கு ஏற்ப, நாட்டின் தொழில்துறை விநியோகச் சங்கிலியை (Supply Chain) வலுப்படுத்த இந்தத் திட்டம் உதவும்.
மின்சார வாகனங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், பாதுகாப்பு மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த அரிதான பூமி நிரந்தர காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறையில் நீண்ட காலமாக சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது, சமீபத்திய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இந்தக் காந்தங்களின் ஆக்ஸைடுகளைத் தொடங்கி, முடிக்கப்பட்ட காந்தங்கள் வரை முழு மதிப்புக் கூட்டல் சங்கிலியையும் (Value Chain) நாட்டில் உருவாக்க, இத்திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கப்படும். 7 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட இத்திட்டம், உலக REPM சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய இடத்திற்குக் கொண்டு சென்று, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.