இந்தியா உட்பட 60 நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி விசாரணை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வாய்ப்பு

சர்வதேச வர்த்தக விதிகளை மீறியதாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட 60 நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தையில் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், இந்த விசாரணை 150 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றார். இதில் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். டிரம்பின் இந்த புதிய வியூகம் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.