இந்திய பாரம்பரிய ஜிமிக்கி கம்மலை விண்டேஜ் என கூறி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க நிறுவனம் ரால்ப் லாரன்

பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் தெற்காசியாவின் பாரம்பரிய ஜிமிக்கி கம்மல்களை தனது சொந்த ‘விண்டேஜ்’ சேகரிப்பு என்று கூறி அமெரிக்காவின் ரால்ப் லாரன் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய பாணி கம்மல்களை அணிந்து மாடல்கள் வலம் வந்த போதிலும், அதன் உண்மையான பூர்வீகம் குறித்து அந்த நிறுவனம் எந்த அங்கீகாரமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் ஃபேஷன் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கோலாப்பூரி செருப்பு வடிவமைப்புகளைப் பயன்படுத்தியதாகப் புகாரில் சிக்கிய இந்த நிறுவனம், தற்போது ஜிமிக்கியையும் சொந்தம் கொண்டாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த வடிவமைப்புகள் முற்றிலும் தங்களால் உருவாக்கப்பட்டவை என்று ரால்ப் லாரன் வாதிடுகிறார். ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அதைத் திருடுவதாக அந்த நிறுவனத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.