இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த சீன பிரஜை கைது

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சீனாவைச் சேர்ந்த 49 வயதான லியு குன்ஜிங் என்ற பிரஜை முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பஹ்ரைச் மாவட்டத்தின் ரூபைடியா எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றபோது, லியு குன்ஜிங் தனது மொபைல் ஃபோனில் எல்லைப் பகுதிகளை வீடியோ பதிவு செய்ததைக் கண்ட சாஸ்த்ர சீமா பல் (SSB) படையினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜையை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் SSB அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து மூன்று மொபைல் ஃபோன்கள், பல நாட்டு நாணயங்கள் மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை முகமைகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஊடுருவலுக்குப் பின்னால் உளவு பார்க்கும் நோக்கம் உள்ளதா என்பதை கண்டறிய கூட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.