ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய தலைவலி பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கும் உயர்நீதிமன்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்கைப் புகார்தாரரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு உகந்தது என அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ஆதவ் அர்ஜுனாவுக்கு இது அடுத்தக்கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகப் புகார்தாரர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டுள்ளார். அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள சூழலில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.