ஆசியாவின் பிரம்மாண்ட ஆழித்தேரோட்டம் நாளை திருவாரூரில் கோலாகலம்

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டம் நாளை (29.03.26) நடைபெறுகிறது. சுமார் 96 அடி உயரமும் 350 டன் எடையும் கொண்ட இந்த பிரம்மாண்ட தேரை அலங்கரிக்கும் பணிகள் நிறைவடைந்து, தற்போது வீதி உலா வரத் தயாராக உள்ளது. தேரின் முன்புறம் 26 அடி நீளமுள்ள நான்கு குதிரைகள் மற்றும் கலைநயம் மிக்க யாளிச் சிற்பங்கள் பொருத்தப்பட்டு ஆழித்தேர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
320 அடி நீளமுள்ள வடங்களைப் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா தியாகேசா’ என முழக்கமிட்டு தேரை இழுக்க உள்ளனர். இதற்காக 18 வகையான வாத்தியங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புராண சிறப்புமிக்க இந்த தேரோட்டத்தைக் காணவும் தியாகராஜரின் திருப்பாத தரிசனம் பெறவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவியத் தொடங்கியுள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.