ஆசியாவின் தூய்மையான கிராமமான மாவ்லின்னாங்கிற்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

மேகாலயாவின் காசி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவ்லின்னாங் கிராமம் அதன் தூய்மைக்காக உலகளவில் புகழ்பெற்றது. இருப்பினும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் மக்களின் அமைதியைப் பாதுகாக்கவும் கிராம சபையான ‘தர்பார்’ அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி 2026 ஜனவரி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் கிராமத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் இந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமையை வழிபாடு மற்றும் ஓய்விற்காக ஒதுக்கியுள்ளனர். வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏற்படும் இடையூறுகளைக் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ள விருந்தினர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழலைப் பராமரிக்கவும் சமூக ஒழுக்கத்தைப் பேணவும் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.