அருணாச்சலத்தின் கைவிடப்பட்ட பாலத்தில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட பார்டர் ப்ரூ கஃபே

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியான ஜெமிதாங்கில், நயாம்ஜங் சூ நதியின் குறுக்கே கைவிடப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய ராணுவம் ஒரு தனித்துவமான உணவகமாக மாற்றியுள்ளது. ‘ஆபரேஷன் சத்பாவனா’ திட்டத்தின் கீழ் வெறும் 31 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த ‘பார்டர் ப்ரூ கஃபே’, இமயமலையின் இயற்கை எழிலுக்கு மத்தியில் நதியின் ஓசைக்கு இடையே காபி அருந்தும் ஒரு புதிய அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது.
உள்ளூர் மன்பா சமூகப் பெண்களால் நடத்தப்படும் இந்த கஃபே, எல்லைப் பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயன்படுத்தப்படாத ஒரு பாலத்தை பாரம்பரியச் சின்னமாக மாற்றி, அதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுத்த ராணுவத்தின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தவாங் வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள இந்த கஃபே, ராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் பாலமாகத் திகழ்கிறது.