அருணாச்சல விவகாரம் சீனாவுக்கு இந்தியா கண்டனம் பாகிஸ்தானுக்குக் கடுமையான பதில்

வெளியுறவு அமைச்சகம் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் பல முக்கிய சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது. சீன அதிகாரிகளால் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை சீனா மறுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்றும், இந்தியக் குடிமகனுக்கு இழைக்கப்பட்ட அநாகரிகமான நடவடிக்கை பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நாடு கடத்தல் கோரிக்கை சட்ட மற்றும் உள்நாட்டு நடைமுறைகளில் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றுவது தொடர்பான பாகிஸ்தானின் கருத்தை இந்திய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. பாகிஸ்தான் தன் நாட்டிலுள்ள சிறுபான்மையினரிடமிருக்கும் “முறையான தவறான நடத்தை” பற்றிய தன் கறைபடிந்த பதிவைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, மேலும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தார்மீக அதிகாரம் அதற்கு இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.