அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்த நிலையில் இந்தியாவிற்கு சிறப்பு சலுகை

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு இந்த மூலோபாய நீர்வழியில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையிலான மோதலால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் இந்த குறுகிய பாதை வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதற்றமான சூழலில் இந்தியாவிற்கு ஈரான் சாதகமான சிக்னலை வழங்கியுள்ளது. சமையல் எரிவாயு விநியோகத்தை சீராக வைத்திருக்க இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சில இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் பாதுகாப்பில் இரண்டு எல்பிஜி டேங்கர்கள் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் வேளையில் ஈரானின் இந்த விதிவிலக்கான முடிவு இந்தியாவிற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.