அணு ஆயுத பலத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கிம் ஜாங் உன் அதிரடி

வடகொரியாவின் அதிபராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள கிம் ஜாங் உன், அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் அணு ஆயுத அந்தஸ்து குறித்து அதிரடியான முடிவை அறிவித்துள்ளார். எத்தகைய சூழல் உருவானாலும் வடகொரியா தனது அணு ஆயுத பலத்தை விட்டுக் கொடுக்காது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தென்கொரியாவைத் தனது நாட்டின் முதன்மை எதிரியாக அறிவித்ததோடு, இரு நாடுகளும் அமைதி வழியில் இணைவது தொடர்பான அரசியல் சாசன விதிகளிலும் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இதுவே முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உலக நாடுகளுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.