பள்ளி விடுமுறை நிறைவு: 2,510 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

பள்ளி விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. விடுமுறையை பயன்படுத்தி தங்கள் தாத்தா, பாட்டி வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்ற மாணவர்கள் தற்போது மீண்டும் தங்கள் வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களும் அவர்களுடன் பயணிக்கும் பெற்றோர்களும் எளிதாக நகரமடைந்து செல்லும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் விசேஷ ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மே 30 மற்றும் 31 ஆம் தேதிகளில், சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து இயங்கும் வகையில் மொத்தம் 2,510 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 26,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஏற்பாடுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு கூடுதல் பயணங்கள் ஏற்பாடு செய்யும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.