இராக்கை விட்டு உடனே வெளியேறுங்கள் அமெரிக்கா அதிரடி எச்சரிக்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக இராக்கை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஆதரவு குழுக்களின் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஓமன் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தனது பணியாளர்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. இது பிராந்திய போர் வெடிப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் மூன்றாவது வாரமாக நீடிப்பதோடு ஈரான் உளவு பார்த்ததாக 20 பேரை கைது செய்துள்ளது. இரு நாடுகளும் பின்வாங்காத நிலையில் இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. தற்போதைய சூழலில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதால் மத்திய கிழக்கு பகுதி முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.