காதலுக்காக உயரத்தைக் குறைக்கும் பெண்கள்; துருக்கியில் விற்கப்படும் ஆபத்தான அறுவை சிகிச்சை பேக்கேஜ்கள்!

காதலுக்காகவும் உறவுகளுக்காகவும் பெண்கள் தங்கள் உயரத்தைக் குறைக்கும் அபாயகரமான போக்கு துருக்கியில் அதிகரித்து வருகிறது. ‘லிம்ப்-ஷார்ட்டனிங் சர்ஜரி’ எனப்படும் இந்த வேதனையான மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை தற்போது இஸ்தான்புல்லில் உள்ள சில கிளினிக்குகளில் ஆடம்பரப் பேக்கேஜாக விற்கப்படுகிறது. உயரமான பெண்களை விட குட்டையான பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இந்தப் போக்கு உருவானது. இது சமூக அழுத்தம் மற்றும் தன்னம்பிக்கையின்மையின் விளைவு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த அறுவை சிகிச்சையில், தொடை அல்லது காலின் கீழ்ப் பகுதியிலுள்ள எலும்பின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டு, மீதமுள்ள எலும்புகள் ஸ்டீல் ராடுடன் இணைக்கப்படுகின்றன. இந்தப் பேக்கேஜில் அறுவை சிகிச்சை மட்டுமின்றி சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் அடங்கும். இருப்பினும், நரம்பு சேதம், தொற்று மற்றும் நிரந்தர பலவீனம் போன்ற அபாயங்கள் இருப்பதால் இந்த செயல்முறை மிகவும் ஆபத்தானது. முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும்.