ஐசிஜிஎஸ் அக்சர் இந்திய கடலோர காவல்படையில் இணைப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கு புதிய பலம்

‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘ஐசிஜிஎஸ் அக்சர்’ என்ற அதிநவீன விரைவு ரோந்துக் கப்பலை (FPV) கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளது. இந்தக் கப்பல் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். இது, ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் எட்டு கப்பல்களின் வரிசையில் இரண்டாவது கப்பலாகும்.
சுமார் 330 டன் எடை கொண்ட இந்த கப்பல் 51.43 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், இரண்டு சக்திவாய்ந்த கடல்சார் டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல் 27 நாட்டிகல் மைல்களுக்கு மேல் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், இது 1,500 நாட்டிகல் மைல்கள் வரை இடைநில்லாமல் பயணிக்க முடியும். கடலோர கண்காணிப்பு, ரோந்து, கடத்தல் தடுப்பு மற்றும் தேடுதல், மீட்புப் பணிகளில் இந்தக் கப்பல் முக்கியப் பங்கு வகிக்கும்.