கேஸ் சிலிண்டர் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம், தாயை அடித்துக் கொன்ற போதை மகன்; சகோதரியின் பரபரப்பு வாக்குமூலம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், போதைக்கு அடிமையான மகன் ஒருவன், கேஸ் சிலிண்டர் வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் தனது தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை கர்தனி பகுதியில் உள்ள அருண் விஹாரில், நவீன் என்ற இளைஞன் தனது 51 வயது தாயான சந்தோஷை கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகி, அதில் நவீனின் தந்தையும் சகோதரியும் அவரைத் தடுக்க முயல்வது தெரிகிறது. வீடியோவில், சகோதரி “இவன் நம்மையும் கொன்றுவிடுவான்” என்று கத்துவது கேட்கிறது.
படுகாயம் அடைந்த சந்தோஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நவீனை போலீசார் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில், நவீன் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. 2020ல் அவருக்குத் திருமணம் நடந்தது, ஆனால் அவரது மனைவியும் சண்டைகள் காரணமாக அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவர் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் வரதட்சணை புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.