எலோன் மஸ்க்கின் சொத்து வளர்ச்சி குறித்து போப் கவலை

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் சொத்துக்கள் வேகமாக அதிகரிப்பது குறித்து போப் கவலை தெரிவித்துள்ளார். இது உலகளாவிய பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார். தொழிலாளர்களின் ஊதியம் தேக்கமடைந்துள்ள நிலையில், தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் வேகமாக உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கத்தோலிக்க செய்தி வலைத்தளமான க்ரக்ஸ்-க்கு அளித்த நேர்காணலில், போப் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பள வேறுபாடு ஆறு மடங்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 600 மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று போப் சுட்டிக்காட்டினார். செல்வம் ஒரு சிலரிடம் குவிவது எதிர்காலத்தில் புதிய மோதல்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். 2024 ஆம் ஆண்டின் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, 2019 முதல் 2024 வரை தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் 50% அதிகரித்துள்ளது, ஆனால் ஊழியர்களின் ஊதியம் 0.9% மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.