“நான் சாகப் போறேன், எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்” – அக்காவுக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு 17 வயது சிறுமி தற்கொலை

சென்னை, திருநின்றவூரில் காதலன் பேசாததால் மனம் உடைந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர், நாச்சியார் சத்திரம், விவேகானந்தர் தெருவில் வசித்து வரும் குமாரி என்பவரின் 17 வயது மகள், பிளஸ் டூ முடித்துவிட்டு கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக வீட்டின் அருகே வசிக்கும் 20 வயது ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், காதலன் அவளுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று மாலை வீட்டில் நைலான் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்துகொண்ட சிறுமி தனது சகோதரிக்கு அனுப்பிய ஒரு வாய்ஸ் மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், “ரொம்ப சாரி அக்கா, அம்மாவ பத்திரமா பாத்துக்கோ. உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போறேன், மன்னிச்சுக்கோங்க. அவங்க அம்மா, அக்கா, அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம். என்னால தான் உனக்கும் அம்மாவுக்கும் இவ்ளோ அசிங்கம். நான் சாகப் போறேன். எனக்கு இருக்கவே பிடிக்கல. இருக்கக் கூடாது, இப்பவே செத்துடனும்னு தோணுது. என் சாவுக்கு அவங்க குடும்பம் மட்டும்தான் அக்கா காரணம்” என்று பேசிவிட்டு சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.