5 இன்னிங்ஸ்களில் 36 சிக்ஸர்கள்: 50 வருட உலக சாதனையை தகர்த்த இந்தியா, இங்கிலாந்தில் புதிய சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது.
அந்தத் தொடரின் முதல் போட்டியில், வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தது. இருப்பினும், ஃபினிஷிங் செய்யத் தவறியதும், 7 கேட்சுகள் தவறவிட்டதும் இந்திய அணிக்கு தோல்வியைக் கொடுத்தது.
ஆனால் அதற்கெல்லாம் அசராத இந்தியா 2வது போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்து 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் 430 ரன்கள் அடித்து ஏராளமான சாதனைகளைப் புரிந்தார். அதனால் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆசிய அணியாக இந்தியா சரித்திர சாதனை படைத்தது.
5 இன்னிங்ஸ்களில் 36 சிக்ஸர்கள்:
அடுத்ததாக மூன்றாவது போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த இன்னிங்ஸில் இந்தியா மொத்தம் 5 சிக்சர்கள் அடித்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் சேர்த்து இந்தியா மொத்தம் 31 சிக்சர்கள் அடித்திருந்தது.
50 வருட சாதனை:
அதையும் சேர்த்து 5 இன்னிங்ஸ்களில் இந்தியா 36* சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதன் வாயிலாக ஒரு வெளிநாட்டுத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1974 – 75ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 32 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.
2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூஸிலாந்து 32 சிக்ஸர்கள் அடித்ததும் முந்தைய சாதனை. தற்போது அந்தச் சாதனையை இத்தொடரின் பாதியிலேயே இந்தியா முறியடித்துள்ளது. அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 192 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதிகபட்சமாக ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 193 இலக்கை இந்தியா துரத்தி வருகிறது.