4 கிலோ தங்கத் திருட்டு முதல் 5 கோடி ரூபாய் பங்களா வரை சிக்கிய உபி காவலரின் போதை சாம்ராஜ்யம்

உத்தரபிரதேசத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் அலோக் பிரதாப் சிங்கிற்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. லக்னோவில் உள்ள 7,000 சதுர அடி பரப்பளவிலான இந்த பிரம்மாண்ட மாளிகை, சட்டவிரோத கோடின் கலந்த இருமல் மருந்து கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2006-ல் 4 கிலோ தங்கம் திருடிய வழக்கில் கைதான அலோக், பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக உருவெடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மொத்த மருந்து விற்பனை நிலையங்களை நடத்தி வந்த அலோக், ஏற்கனவே இரண்டு முறை பணியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் எஸ்டிஎஃப் படையினரால் கைது செய்யப்பட்ட இவரிடம் தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சட்டவிரோத கும்பல் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது அம்பலமாகியுள்ள நிலையில், அவரது பங்களாவின் உண்மையான மதிப்பை கணக்கிட மதிப்பீட்டாளர்களை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.