2027 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா? கம்பீருக்கு ‘ஷாக்’ கொடுத்த ஹிட்மேனின் அதிரடி முடிவு!

புது தில்லி: 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நீல நிற சீருடையில் ரோஹித் சர்மாவை மீண்டும் பார்க்க முடியுமா? ரசிகர்களின் நீண்ட கால இந்த கேள்விக்கு, தனது மனதிலிருப்பதை வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளார் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா. “உலகக்கோப்பையை வெல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என அவர் விடுத்துள்ள அதிரடி செய்தி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மாவின் இந்த பிடிவாதமான முடிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினரின் எதிர்காலத் திட்டங்களில் இது ஒரு சிக்கலை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கைநழுவிப்போன அந்த கனவை நனவாக்கவே ரோஹித் இவ்வளவு தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.
ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலகட்டத்திலும், 50 ஓவர் உலகக்கோப்பைக்கே தான் அதிக முக்கியத்துவம் தருவதாக ரோஹித் தெளிவுபடுத்தியுள்ளார். அனுபவம் வாய்ந்த இந்த கேப்டனின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, இளம் வீரர்களைக் கொண்டு அணியை கட்டமைக்க நினைக்கும் பிசிசிஐ (BCCI) மற்றும் கம்பீர் கூட்டணி இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.