2027 உலகக்கோப்பையில் ரோஹித்? ‘ஹிட்மேன்’ கொடுத்த அதிரடி அப்டேட்!

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு அவர் 40 வயதை எட்டினாலும், இந்திய அணிக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கை அவரிடம் குறையவில்லை.
களத்தில் ரோஹித்தின் தற்போதைய ஃபார்ம்
கடந்த 2025-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ரோஹித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், அதிக ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார். குறிப்பாக, அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இரண்டு அரைசதங்கள் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். இருப்பினும், சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் (26, 24, 11 ரன்கள்) சற்று தடுமாற்றத்தை சந்தித்தார்.
மனம் திறந்த ரோஹித் சர்மா
சமீபத்தில் கெவின் பீட்டர்சனுடன் நடந்த உரையாடலின் போது, 2027 உலகக்கோப்பை குறித்து ரோஹித் கூறியதாவது:
“நாட்டிற்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம். சிறுவயதிலிருந்தே 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். அந்த கனவு இன்னும் அப்படியே இருக்கிறது. நிச்சயமாக நான் இந்த உலகக்கோப்பையை வெல்ல விரும்புகிறேன்.”
மீண்டும் எப்போது களமிறங்குவார்?
2011 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காதது ரோஹித்திற்கு இன்றுவரை ஒரு ஏமாற்றமாகவே உள்ளது. 2023-ல் இறுதிப்போட்டி வரை சென்றும் கோப்பையை நழுவவிட்டது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை அளித்தது. தற்போது வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் பங்கேற்கவுள்ளார். அதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ‘ஹிட்மேன்’ அதிரடி காட்ட தயாராகி வருகிறார்.