2026-லும் உதயசூரியன் தான்: காங்கிரஸ் கூட்டணி குறித்து ஸ்டாலின் அதிரடி!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், திமுக – காங்கிரஸ் இடையிலான உறவு “உடைக்க முடியாதது” என்றும், இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கும் என்றும் தெளிவுபடுத்தினார். இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு அவர் நேரடியான பதிலை அளிக்கவில்லை.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ராகுல் காந்தி மீது எனக்கு சகோதரர் போன்ற பாசம் உண்டு. நாங்கள் இணைந்து தேர்தலைச் சந்திப்போம், ஆனால் அதிகாரப் பகிர்வு குறித்த கேள்விக்கு இப்போது இடமில்லை,” என்று கூறினார். 2021 தேர்தலில் திமுக 133 இடங்களை வென்ற நிலையில், 18 இடங்களை வென்ற காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை காங்கிரஸ் கூடுதல் இடங்களையும், ஆட்சியில் பங்கையும் கோரி வரும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை பிப்ரவரி 22 முதல் தொடங்க உள்ளது.
பாஜக மற்றும் என்.டி.ஏ கூட்டணியை “டப்பா என்ஜின்” என்று கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், இந்தத் தேர்தல் “ஆரியர் மற்றும் திராவிடர்” இடையிலான போர் என்று குறிப்பிட்டார். பாஜக மாநிலத்தில் வெறுப்புணர்வையும் மதவாதத்தையும் தூண்டி மக்களைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், தமிழக மக்கள் பிரித்தாளும் அரசியலை நிராகரித்து, என்.டி.ஏ கூட்டணிக்கு படுதோல்வியைப் பரிசளிப்பார்கள் என்று உறுதியளித்தார்.