2 மாதங்களுக்குப் பிறகு திரும்பிய ‘இறந்த’ மகள் சொன்ன பகீர் தகவல்- ‘தந்தை குற்றவாளி அல்ல, தாய்தான் காரணம்’

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வயது மகளைக் கை கால்களைக் கட்டி கால்வாயில் வீசிய வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் இந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டார். காணாமல் போனதால் மகள் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு அந்த ‘இறந்த’ மகள் திடீரெனத் திரும்பி வந்துள்ளார். தனது தந்தை நிரபராதி என்றும், கால்வாயில் வீசியதற்கு முக்கிய குற்றவாளி தனது தாய்தான் என்றும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண், தனது தந்தையின் செயலுக்குத் தாயே தூண்டுகோலாக இருந்ததாகத் தெரிவித்தார். தந்தையை விடுவித்து, தாயைக் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தனை நாட்கள் அவர் எங்கே இருந்தார் என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. காவல்துறைக்கு மகள் வாக்குமூலம் அளித்த பின்னரும், வைரல் வீடியோவைச் சரிபார்த்த பின்னருமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.