145 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய சரிதா! டாய் டிரெய்னின் முதல் பெண் டிடிஇ-யாக சாதனை

டார்ஜிலிங் இமாலயன் ரயில்வேயின் (DHR) 145 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக, பாரம்பரியமிக்க டாய் டிரெய்லில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சாதனையைப் படைத்தவர் கோர்க்கா இனத்தைச் சேர்ந்த சரிதா யோல்மோ.
சோனடாவைச் சேர்ந்த சரிதா, தற்போது சிலிகுரியில் வசித்து வருகிறார். இதற்கு முன்பு கௌஹாத்தி-பெங்களூரு மற்றும் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நீண்ட தூர ரயில்களில் வெற்றிகரமாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ரயிலில் சீனியர் சிடிசி (Senior CTC) பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
கடினமான சூழல்கள் மற்றும் தங்குமிடம் தொடர்பான சவால்களால் பொதுவாகப் பெண்கள் இந்தப் பணிக்கு முன்வராத நிலையில், சரிதாவின் இந்த முயற்சி மற்றவர்களுக்குப் பெரிய ஊக்கமாக அமையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான டாய் டிரெய்ன் சேவையை மேலும் நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரயிலின் வருவாயைப் பெருக்கவும், சேவையில் புதுமையைப் புகுத்தவும் சரிதாவுக்கு இந்தச் சிறப்புப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக டிஹெச்ஆர் இயக்குநர் ரிஷப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.