₹500 நோட்டுகளை திரும்பப் பெற்றால் என்ன நடக்கும்?

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ₹500 நோட்டுகளையும் முற்றிலும் புழக்கில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்றார். ஏற்கனவே ₹2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அதேபோல ₹500 நோட்டுகளையும் நீக்குவது ஊழலை கட்டுப்படுத்தும் வழியாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார். மேலும், தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் ₹500 நோட்டுகளின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு பலரும் பலவிதமான எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர். ₹500 நோட்டுகள் தினசரி வர்த்தகங்களிலும், சிறிய அளவிலான பரிவர்த்தனைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்குவது, கிராமப்புற மற்றும் தொழிலாளர் வகுப்பினருக்கு சிக்கலாக அமையக்கூடும். பணமில்லா பரிவர்த்தனை வளர்ச்சியடைந்தாலும், இன்னும் பணத்தின் பங்கு நிறைவடையவில்லை. எனவே, ₹500 நோட்டுகளையும் வாபஸ் பெறுவது போன்ற முடிவுகள் எடுக்கப்படும் முன், அதன் தாக்கங்களை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் ஆலோசனை.