ஹார்முஸ் நீரிணையில் இந்திய எரிசக்தி கப்பல்களுக்கு ஈரான் வழங்கும் அதிரடி சலுகை

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஹார்முஸ் நீரிணையில் சிறப்பு சலுகைகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி பேசுகையில், இந்தியாவின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த மோதலில் இந்தியாவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நீண்ட காலப் போராட்டத்திற்குத் தயாராகி வரும் ஈரான், நட்பு நாடான இந்தியாவின் வணிக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்தியாவில் நிலவும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த இலாஹி, அண்டை நாடுகள் அமெரிக்க தளங்களை அனுமதிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தார். உலகத் தலைவர்கள் போரை நிறுத்த முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஈரான், தனது பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் உறுதியாக உள்ளது.