ஹாங்காங்கில் ஜனநாயகத்தின் குரல் ஒடுக்கப்பட்டது: ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு ஊடக ஜாம்பவானும் ‘ஆப்பிள் டெய்லி’ இதழின் நிறுவனருமான ஜிம்மி லாய்க்கு (78), அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020-ம் ஆண்டு சீனா கொண்டு வந்த சர்ச்சைக்ககுரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (NSL), ‘வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தது’ மற்றும் ‘தேசத்துரோகம்’ போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த முடிவை மிகக் கொடூரமானது என்றும், ஹாங்காங்கின் ஊடக சுதந்திரத்தின் மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்றும் விமர்சித்துள்ளன.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜிம்மி லாயின் மகன் செபாஸ்டியன் லாய் கூறுகையில், இது ஹாங்காங்கின் சட்ட அமைப்பின் வீழ்ச்சியையும், நீதியின் முடிவையும் குறிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஜிம்மி லாயுடன் அவரது பத்திரிகையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் ஆறு பேருக்கு 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் அமைப்பும் இந்த தீர்ப்பைக் கண்டித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது.
அதே சமயம், சீன அரசு மற்றும் அதன் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இந்த தண்டனையை நியாயப்படுத்தியுள்ளன. இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கை அராஜகத்திலிருந்து மீட்டு வளமான பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர். 78 வயது முதியவரான ஜிம்மி லாய்க்கு விதிக்கப்பட்ட இந்த 20 ஆண்டு சிறைத்தண்டனை, நடைமுறையில் அவருக்கு ஆயுள் தண்டனைக்கு நிகரானது என்பதால் உலக நாடுகள் சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ளன.