ஷோயப் மாலிக் நிகழ்ச்சியில் ராஜீவ் சுக்லாவின் போலி வீடியோ! இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து வெடித்த சர்ச்சை

டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவின் கருத்தைத் திரித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராஜீவ் சுக்லாவின் உண்மையான பேச்சு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக பிசிசிஐ, ஐசிசி-யிடம் (ICC) மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்ததாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது குரல் சிதைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பொதுமக்கள் யாரும் இந்தத் தவறான வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், அதைப் பார்த்தால் உடனே புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஐசிசி-யின் முயற்சியைப் பாராட்டி அவர் பேசிய உண்மையான கருத்தைத் திரித்து சர்ச்சை உருவாக்க முயன்றது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.