வேலைக்கு வராத பணிப்பெண்; துப்பாக்கி காட்டி மிரட்டிய உரிமையாளர் மகன்! தானேவில் பரபரப்பு

மகாராஷ்டிராவின் தானேவில் (Thane) வீட்டு வேலை செய்யும் பெண்ணை மிரட்டிய விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்த பணிப்பெண் வேலைக்கு திரும்பாததால், வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மகன் பணிப்பெண்ணை திருட்டு வழக்கில் சிக்கவைப்பதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், உரிமையாளரின் மகன் பணிப்பெண்ணின் குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணின் குடும்பத்தினர் காசர்வதவலி காவல்துறையில் புகார் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, வீட்டு உரிமையாளர் மோனிகா ஷர்மா மற்றும் அவரது மகனை விசாரணைக்காக கைது செய்துள்ளது. விசாரணையில், உரிமையாளர் மகன் காட்டியது துப்பாக்கி போன்று வடிவமைக்கப்பட்ட லைட்டர் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆயுதம் போன்ற பொருளைக் காட்டி மிரட்டிய குற்றத்திற்காக தாயும் மகனும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பணிப்பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை விசாரித்து வருகிறது.