வயிற்று வலி நாடகமாடி போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட இரண்டு ரவுடிகள் மீண்டும் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதுல் மற்றும் ரகீப் என்ற இரு கேங்ஸ்டர்கள் இன்று காலை தப்பிச் சென்றனர். வயிற்று வலி என நாடகமாடி கதவைத் திறக்கச் செய்த இவர்கள், அங்கு பணியில் இருந்த காவலரைத் தாக்கிவிட்டு தப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் காவல்துறை தரப்பில் உடனடி தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
தப்பியோடிய இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே எஸ்.ஓ.ஜி மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து வயல்வெளி பகுதியில் மறைந்திருந்த அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் மீது தற்போது காவலில் இருந்து தப்பித்தல் மற்றும் அரசு ஊழியரைத் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த துரித நடவடிக்கைக்காக போலீஸ் குழுவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.