லெபனானில் மக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வெள்ளை பாஸ்பரஸ் தாக்குதல்

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரில் இஸ்ரேலிய ராணுவம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் வீடுகளும் வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த வேதிப்பொருள் காற்றில் கலக்கும்போது தீப்பிடித்து எரியும் தன்மை கொண்டதால், இது பொதுமக்களுக்குக் கடுமையான உடல் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என ஆய்வாளர் ராம்ஸி கைஸ் எச்சரித்துள்ளார்.
வான்வழியாக வீசப்பட்ட இந்த பாஸ்பரஸ் குண்டுகள் தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டவிரோதத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.