ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கிறதா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த MI நிர்வாகம்!

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (MI) தங்கள் பல வருட வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவை விடுவிக்கக்கூடும் என்று சமூக வலைதளங்களில் பல யூகங்கள் பரவின. நவம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து ஃபிரான்சைஸிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், இந்த வதந்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, MI அணிக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கினார். ரோஹித் ஷர்மாவை MI தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பலமுறை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரோஹித் ஷர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு செல்லலாம் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்களின் X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “𝗦𝘂𝗻 𝘄𝗶𝗹𝗹 𝗿𝗶𝘀𝗲 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄 𝗮𝗴𝗮𝗶𝗻 ye toh confirm hai, but at (K)night… मुश्किल ही नहीं, नामुमकिन है!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், ரோஹித் ஷர்மாவுடனான தங்களின் நீண்டகால உறவை முறித்துக் கொள்ளும் எண்ணம் MI-க்கு இல்லை என்பதை ஃபிரான்சைஸி உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் 272 போட்டிகளில் 7046 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.