ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை? நாடாளுமன்றத்தில் வெடித்தது புதிய சர்ச்சை!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கொண்டு வந்த அதிரடி தீர்மானம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், அவர் எதிர்காலத்தில் தேர்தல் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் துபே மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி நாட்டின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நினைக்கும் சக்திகளுக்கு ராகுல் காந்தி துணை போவதாகவும், அவரது பேச்சுகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் சாடினார்.
செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, “நாட்டைத் தவறாக வழிநடத்த யாரையும் அனுமதிக்க முடியாது. ராகுல் காந்தி தொடர்ந்து அவையின் மாண்பைக் குலைத்து வருகிறார்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. பாஜகவின் இந்த நடவடிக்கையை ‘அரசியல் பழிவாங்கல்’ என காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. இருப்பினும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி பிடிவாதமாக உள்ளது. இந்த விவகாரம் வரும் நாட்களில் ராகுல் காந்திக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.