ரஷ்யாவிற்கு ஜாக்பாட் வளைகுடா போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பல ஆயிரம் கோடி லாபம்

உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள் தற்போது ஈரான்-இஸ்ரேல் மோதலால் வலுவிழந்துள்ளன. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா, தனது ரகசிய கப்பற்படை மூலம் கச்சா எண்ணெய் விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தை விட தற்போது ரஷ்யாவின் எண்ணெய் வருமானம் 14 சதவீதம் உயர்ந்து, சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 120 டாலரைத் தாண்டியதால், விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான சில தடைகளை அமெரிக்காவே தளர்த்தியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் காப்பீட்டுச் செலவு அதிகரிப்பால் ரஷ்யாவை நாடுவதை அமெரிக்கா தற்போது அனுமதித்துள்ளது. வளைகுடா நாடுகளின் போர் பதற்றம் மற்ற நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், ரஷ்யாவிற்கு அது மிகப்பெரிய பொருளாதார லாபத்தையும் உலக சந்தையில் மீண்டும் ஒரு வலுவான இடத்தையும் தேடித்தந்துள்ளது.