ரன்வீர் சிங்குக்கு கொலை மிரட்டல்: பிஷ்னோய் கும்பல் கைவரிசையா?

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட மர்ம நபர் ஒருவர், வாட்ஸ்அப் ஆடியோ செய்தி மூலம் ரன்வீர் சிங்கிடம் பல கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே சல்மான் கான் மற்றும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ஆகியோருக்கு பிஷ்னோய் கும்பல் குறிவைத்த நிலையில், தற்போது ரன்வீர் சிங் இந்த பட்டியலில் இணைந்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. இது தொடர்பாக ரன்வீர் சிங் மும்பை காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
பாதுகாப்பு கருதி ரன்வீர் சிங்கின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்ட ஆடியோ குரலை அடையாளம் காண தடயவியல் துறையின் உதவியை நாடியுள்ள போலீசார், சைபர் கிரைம் பிரிவு மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.