ரத்தன் டாடாவின் சொகுசு பங்களா விற்பனைக்கு! விலையை விட 6 மடங்கு அதிகம் தர முன்வந்த பழைய நண்பர்

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் சீஷெல்ஸில் உள்ள மாஹே தீவில் அமைந்திருக்கும் கடற்கரை பங்களா (Villa) தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஏர்செல் நிறுவனர் சி. சிவஷங்கரன் குடும்பம் இந்தப் பங்களாவை 6.2 மில்லியன் டாலருக்கு (சுமார் ₹55 கோடி) வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தச் சொத்தின் மதிப்பை சுயாதீன மதிப்பீட்டாளர்கள் வெறும் ₹85 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தனர்.
பொதுவாக சீஷெல்ஸ் குடிமக்கள் மட்டுமே அங்கு சொத்து வாங்க முடியும் என்ற விதி இருந்தபோதிலும், ரத்தன் டாடாவிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பங்களா விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் ரத்தன் டாடா என்டௌமென்ட் அறக்கட்டளைக்குச் சமமாகப் பிரித்து அளிக்கப்படும். நீண்டகால நண்பரான சிவஷங்கரன் வாங்க முன்வந்திருந்தாலும், அவர்மீது சீஷெல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் திவால் வழக்கு நிலுவையில் இருப்பதால், விற்பனை நடைமுறை குறித்த தெளிவு இல்லை.