மேற்கு ஆசிய போரில் புதின் இரகசிய லாபம் அடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

மேற்கு ஆசியாவில் நிலவும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மிகப்பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் ஆற்றிய உரையில், இந்த மோதல்கள் ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் மூலோபாய வலிமையை அதிகரிக்க ஒரு பொற்கால வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள தடைகளால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வருவது ரஷ்யாவின் கருவூலத்தை நிரப்ப உதவுவதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த போரின் காரணமாக அமெரிக்காவின் கவனம் உக்ரைனிலிருந்து விலகி இஸ்ரேல் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைன் படைகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ரஷ்யப் படைகள் உக்ரைன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தவும், ஈரானுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி பெரும் லாபம் ஈட்டவும் திட்டமிட்டு வருகின்றன. டெஹ்ரானுடனான நெருக்கமான உறவைப் பயன்படுத்தி ஆயுத விற்பனை மூலம் ரஷ்ய பொருளாதாரத்தை புதின் பலப்படுத்தி வருகிறார். தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் புதின் மிகவும் சாதகமான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.