மும்பையின் புதிய மேயர்: 25 கால அரசியலை மாற்றியமைத்த ரிது தாவ்டே!

மும்பையின் புதிய மேயர்: 25 கால அரசியலை மாற்றியமைத்த ரிது தாவ்டே!

நாட்டின் மிகவும் செல்வந்த மாநகராட்சியான பிரஹன்மும்பை மாநகராட்சியில் (BMC), கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த கவுன்சிலர் ரிது தாவ்டே, மும்பையின் புதிய மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிவசேனா (UBT) வேட்பாளரை நிறுத்தாத காரணத்தால், ரிது தாவ்டேவின் வெற்றி உறுதியானது. கடந்த நான்கு தசாப்தங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மும்பை மேயராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

53 வயதான ரிது தாவ்டே, காட்கோபர் மேற்குப் பகுதியிலிருந்து மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநகராட்சி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பிஎம்சியின் கல்விக்குழுத் தலைவர் மற்றும் சீர்திருத்தக் குழுவின் துணைத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். உள்ளூர் அளவில் வலுவான செல்வாக்கு கொண்ட இவர், நிர்வாகத் திறன் மற்றும் பெண் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பரவலாக அறியப்படுபவர்.

இந்த வெற்றியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிவசேனா (UBT) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், சிவசேனா மற்றும் எம்என்எஸ் (MNS) ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த மராத்தி மக்களின் ஆதரவின் காரணமாகவே, பாஜக ஒரு “மராத்தி மேயரை” தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 227 இடங்களைக் கொண்ட பிஎம்சியில் 89 இடங்களுடன் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 118 கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றுள்ள பாஜக, மும்பை மாநகராட்சியின் 25 ஆண்டு கால அதிகாரச் சமன்பாட்டை மாற்றியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *