முட்டி வலிக்கு முட்டைக்கோஸ் இலை: பாட்டி வைத்தியம் நிஜமாகவே பலன் தருமா?

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் வாட்டும் ஒரு முக்கியப் பிரச்சனை முழங்கால் வலி. மூட்டுகளில் உள்ள கொலாஜன் குறைபாடு மற்றும் லூப்ரிகேஷன் (தயவு) குறைவதால் ஏற்படும் உராய்வு, தாங்க முடியாத வலியை உண்டாக்குகிறது. இதற்காக பிஆர்பி (PRP) இன்ஜெக்ஷன் முதல் அறுவை சிகிச்சை வரை பல மருத்துவ முறைகள் இருந்தாலும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘முட்டைக்கோஸ் இலை வைத்தியம்’ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
முட்டைக்கோஸ் இலை பேக் போடுவது எப்படி?
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த முறையில், புதிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து அதன் தடிமனான நரம்புகளை நீக்கிவிட்டு, இலை மென்மையாகும் வரை லேசாக நசுக்க வேண்டும். பின்னர் அந்த இலைகளை வலியுள்ள முழங்கால் பகுதியில் வைத்து, ஒரு மெல்லிய பருத்தி துணி அல்லது பேண்டேஜ் கொண்டு கட்டிவிட வேண்டும். இதனை 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கலாம்.
இது எப்படி வேலை செய்கிறது?
முட்டைக்கோஸ் இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory properties) மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகின்றன. இதனால் முழங்கால் விரைப்புத் தன்மை குறைந்து, நடப்பதில் சற்று நிம்மதி கிடைப்பதாக நம்பப்படுகிறது.
மருத்துவர்களின் எச்சரிக்கை: இது நிரந்தர தீர்வா?
நிபுணர்களின் கருத்துப்படி, முட்டைக்கோஸ் இலை வைத்தியம் என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே. இது மூட்டு தேய்மானம் அல்லது ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகாது.
- தற்காலிக நிவாரணம்: இது வலியைச் சற்று குறைக்குமே தவிர, மூட்டுப் பிரச்சனையை வேரோடு நீக்காது.
- ஒவ்வாமை அபாயம்: சிலருக்கு முட்டைக்கோஸ் இலைகளைத் தோலில் வைப்பதால் அரிப்பு அல்லது அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
- மருத்துவ ஆலோசனை: கடுமையான வலி இருப்பவர்கள் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, முறையாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை அணுகுவது அவசியம்.
எனவே, லேசான வீக்கத்தைக் குறைக்க இந்த இயற்கை முறையைப் பயன்படுத்தினாலும், நிரந்தர தீர்வுக்கு முறையான மருத்துவ சிகிச்சையே சிறந்தது.